அதிகாரம் 123
பொழுது கண்டு இரங்கல்
மங்கையின் உயிருண்ணும் மாலையே வாராதே வருவாயேல் வசைபொழிவேன் வாழ்த்துவேன் பகற்பொழுதை மாலைப் பொழுதேநீ மங்கியிருள் பெற்றதென்ன என்கண்வர் போல் உந்தன் இரக்கமில்லா குணந்தானே அந்நாளில் எங்களுக்கு அஞ்சிநீ பனி உருத்தாய் எங்கள் பிரிவு கண்டு எகத்தாளம் கொட்டுகிறாய் காதலன் இல்லைஎன்று கண்டுகொண்ட மாலையுந்தான் எதிரிபோல் என்னுயிரை எடுக்க நினைக்கிறதே காலைப் பொழுதரும்பி பகல்வேளை மொட்டாகி மாலைப் பொழுதினிலே மலராகும் காமந்தான் மாயன் குழலோசை ‘ மாலைக்கு ‘ தூதாகி கொள்ளியாம் நெருப்பாகி கொல்லுதே என்னுயிரை காலைப் பொழுதென்னைக் காய்வதில்லை மாலை மட்டும் பகையாகி வந்தென்னைப் பாடாய்ப் படுத்துவதேன் ? குறிப்பு : பொழுது கண்டு இரங்கல் - மாலைப் பொழுது வந்தபோது அஞ்சுதல் . காதலர்கள் மாலை வேளையில்தான் காம வேட்கை கொண்டு புணர்ச்சிக்கு முயல்வார்கள் , காதல் இன்பத்தை நுகர்வார்கள் . காதலனைப் பிரிந்து தனியாக இருப்பவளுக்கு மாலைப்பொழுது வந்ததும் சேர்க்கைக்கு வழியின்றி துன்பப்படுகிறாள் . அப்பொழுதைப் திட்டுகிறாள் . பைத்தியம் கொண்டவள் போல் வாயில் வந்தபடி பேசுகிறாள் . பனி உகுத்தாய் - பனியாகிய கண்ணீரைச் சிந்தினாய் . எகத்தாளம் - கைகொட்டிச் சிரித்தல் . மாயன் - கண்ணபிரான் , பஞ்சபாண்டவர்களுக்காக தூது சென்றவன் , அவனுடைய இனிய குழல் ஓசை , இந்தச் சுடுநெருப்பாகிய மாலைப் பொழுதுக்குத் தூது சொல்லும் , படைக்கருவியாக வந்து என் உயிரை வதை செய்கிறதே என் செய்வேன் நான் என்று துன்புறுகிறாள் தலைவி .
- வேற்கவிராயர்