அதிகாரம் 26
புலால் மறுத்தல்
தன்னுடலை வளர்ப்பதற்கு தவறு செய்யாப் பிறவுயிரின் மென்னுடலைக் கொன்றுதின்றால் மேவிடுமோ இறையருளும் ? பொருள்தன்னைப் பேணி பெட்டகத்தில் வைப்பவர்தான் பொருளாட்சி செய்பவராம் புவிமீதில் என்று சொல்லு கருணையொன்றும் இல்லாமல் களைந்து புலால் உண்பார்க்கு அருளாட்சி ஒருபோதும் அமையாது என்று சொல்லு படையெடுத்துப் பிறர் தேசம் பல்லுயிரைக் கொன்றவர்க்கு அடல்நெஞ்சம் அல்லாது அருள்நெஞ்சம் அவர்க்கேது ? பிறவிலங்கின் ஊன்தன்னை பிரியமுடன் உண்பார்க்கு அறநெறிகன் அவர்மனதில் அமையாது என்று சொல்லு கொல்லாமை எனும் விரதம் கொண்டவரே உயிர்பெற்றார் கொன்ற உடல் ஊன்தின்பார் கொடியநர குய்ப்பாரே உண்ணுவார் உண்டாகில் ஊன்விற்பார் உளராவார் உண்ணுவார் இலர்என்றால் ஊன்விற்பார் வரமாட்டார் . கொல்லான் ஒரு உயிரைக் குணமுள்ள சான்றோரை எல்லா உயிர்களுமே இருகையால் கும்பிடுமே குறிப்பு : ஊன் உண்பார்க்கு எங்ஙனம் ஆளும் அருள் ? என்பது வள்ளுவரின் கேள்வியாகும் . அருள் கிட்டாது என்று பொதுவாகச் சொல்லலாம் . ஆனால் விதந்து சொன்னால் மனித நேயம் உள்ளவர்க்கு எந்த உணவு உண்டாலும் அருள்கிட்டும் எனலாம் . இருந்தாலும் புலால் உண்ணாதவனே மனிதருள் சிறந்தவன் என்று உறுதிபடக் கூறலாம் .
- வேற்கவிராயர்