அதிகாரம் 2
வான் சிறப்பு
தென்மதுரைத் தேன்மொழியே திருவள்ளுவரின் வாசகமே தேசமெங்கும் தூது சொல்ல செய்தி ரொம்ப இருக்குதம்மா மண்ணுயிர்கள் வாழ்வதெல்லாம் வான்வழங்கும் மழையமுதால் மானுடர்க்கும் அம்மழையே வழிவகுக்கும் என்று சொல்லு வானம் வறக்குமெனில் வையகமும் வறண்டுவிடும் தானம் தருமமெல்லாம் தங்காது என்று சொல்லு . உழுவார் உழமாட்டார் உண்ணும்பொருள் கிடைக்காது தொழுவார் வரமாட்டார் தொழுகைக்கு என்று சொல்லு . நெடுங்கடலும் வற்றிவிடும் நீர்நிலைகள் காய்த்துவிடும் கடும்வெயிலால் பசும்புல்லும் கருகிவிடும் என்று சொல்லு . வான்சிறப்பை வகைப்படுத்தி வழங்கியுள்ள திருக்குறளே தேன்மொழியே நான்இன்னும் செப்பும் மொழி கேட்பாயே !
- வேற்கவிராயர்